ரூ.58 ஆயிரம் கடனுக்காக சிறுவன் கடத்திக்கொலை தண்ணீரில் மூழ்கடித்து தீர்த்துக்கட்டிய தாத்தா கைது


ரூ.58 ஆயிரம் கடனுக்காக சிறுவன் கடத்திக்கொலை தண்ணீரில் மூழ்கடித்து தீர்த்துக்கட்டிய தாத்தா கைது
x
தினத்தந்தி 19 March 2019 4:45 AM IST (Updated: 19 March 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.58 ஆயிரம் கடனுக்காக சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். தண்ணீரில் மூழ்கடித்து தீர்த்துக்கட்டிய தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின் ராஜ் (வயது 35), மீனவர். இவருடைய மனைவி சகாய சிந்துஜா (33). இவர்களுடைய மகன் ரெய்னா (4). நேற்று முன்தினம் காலையில் ஆரோக்கிய கெபின்ராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று இருந்தார். பகல் 11 மணியளவில் சகாய சிந்துஜா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சிறுவன் ரெய்னா வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது ஆரோக்கிய கெபின்ராஜின் தாய்மாமா, அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவரை கண்டதும் தாத்தா உறவுமுறை என்பதால் சிறுவன் ரெய்னா ஓடிச் சென்று அருகில் நின்றான். உடனே அந்தோணிசாமி சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த மகன் ரெய்னாவை காணாதது கண்டு சகாய சிந்துஜா அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் மகனை தேடி அலைந்தார். அப்போது ரெய்னா, அந்தோணிசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினர். உடனே சகாய சிந்துஜா சிறிது நேரத்தில் மகனை கொண்டு வந்து அந்தோணிசாமி விட்டுவிடுவார் என நினைத்து இருந்தார்.

ஆனால் நீண்டநேரம் ஆகியும் அந்தோணிசாமி திரும்பி வரவில்லை. இதுபற்றி சகாய சிந்துஜா, தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஆரோக்கிய கெபின்ராஜ், மகனை தேடி அந்தோணிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர் எங்கு சென்றார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் அந்தோணிசாமி செல்லும் இடமெல்லாம் மகனை தேடி ஆரோக்கிய கெபின்ராஜ் அலைந்தார்.

இதுதொடர்பாக உடனே கன்னியாகுமரி போலீசில் ஆரோக்கிய கெபின்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்தோணிசாமி யின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அவர், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று அந்தோணிசாமியை கைது செய்தனர். ஆனால் அவருடன் சிறுவன் ரெய்னா இல்லை.

சிறுவன் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அந்தோணிசாமி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிறுவனை கொலை செய்து விட்டதாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவனை பற்றி மேலும் விசாரித்த போது அந்தோணிசாமி கூறிய தகவல் வருமாறு:-

ஆரோக்கிய கெபின்ராஜின் தாயார் அதாவது என்னுடைய அக்காள் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை பலமுறை கேட்டு பார்த்தேன். அவர் தரவில்லை. இதுதொடர்பாக என்னுடைய அக்காளுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே என்னுடைய அக்காள் மகன் ஆரோக்கிய கெபின்ராஜ், மாமா அம்மாவிடம் வந்து தகராறு செய்ய வேண்டாம். அந்த பணத்தை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் அவரும் நீண்டநாட்களாக தரவில்லை. பலமுறை கேட்டு பார்த்தும் பணத்தை திருப்பி தரவில்லை.

இதற்கிடையே பணம் கேட்பதற்காக ஆரோக்கிய கெபின்ராஜ் வீட்டுக்கு சென்றேன். அங்கு அவர் இல்லை. அவருடைய மகன், அதாவது எனக்கு பேரன் உறவுமுறை ரெய்னா அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடத்திச் சென்றால் எப்படியும் பணத்தை கொண்டு வந்து கொடுத்து விட்டு மகனை ஆரோக்கிய கெபின்ராஜ் அழைத்து செல்வார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர், என் மீது போலீசில் புகார் செய்து விட்டார். போலீசார் என்னை தேடுவதை அறிந்தேன். எனவே சிறுவனை அழைத்துக்கொண்டு தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றேன். அங்குள்ள பம்பு செட் கிணற்றில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிறுவனை கொலை செய்தேன். உடனே தொட்டிக்குள்ளேயே போட்டு விட்டு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு தப்பி சென்றேன். என்னுடைய செல்போன் எண்ணை வைத்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை நடந்த இடம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்டது என்பதால், தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் கீழமணக்குடி தென்னந்தோப்புக்கு சென்றனர். அங்கு அந்தோணிசாமி கூறியபடி தண்ணீர் தொட்டியில் சிறுவன் உடல் மிதந்தது. போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்தோணிசாமியை கொலை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர், சிறுவனை தீர்த்துக்கட்டியது எப்படி? என்பது குறித்து போலீசாருக்கு நடித்து காண்பித்தார்.

Next Story