தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு - அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் அதிர்ச்சி தகவல்


தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு - அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 4:45 AM IST (Updated: 19 March 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்துள்ளது என்று காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கூறினார்.

சின்னாளபட்டி,

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் சார்பில் நீடித்த வளர்ச்சிக்கான வேதியியல் ஆராய்ச்சி மேம்படுத்துதல் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. இதற்கு காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது உயர்கல்வித்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆராய்ச்சி படிப்பு என்று வரும்போது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அமெரிக்கா 89 சதவீதமும், சீனா 49 சதவீதமும், இந்தியா 29 சதவீதத்திலும் உள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதிலும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2017-18 ஆண்டுகளில் தமிழகத்தில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சமூக அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில் 36 ஆயிரம் பேர் ஆராய்ச்சி படிப்புக்காக பதிவு செய்துள்ளனர். இது நல்ல வளர்ச்சியை காட்டுகிறது.

மேலை நாடுகளில் இளங்கலை படிப்புகளிலேயே ஆராய்ச்சி படிப்புகளும் சேர்க்கப்பட்டு உள்ளது. அதே நிலை இந்திய உயர் கல்வியிலும் கொண்டுவர வேண்டும். மத்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் ஆய்வில் இந்தியாவில் தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் மற்றும் புளோரைடு கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது உடல் நலத்துக்கும், விவசாயத்துக்கும் மிகுந்த விளைவை ஏற்படுத்தும். இவற்றை குறைப்பதற்கும், அதில் இருந்து மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்கும் தேவையான ஆராய்ச்சிகளை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

புவி வெப்பமயமாவதால் ஏற்பட போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவும், மனித சமூகம் நலமான வாழ்வு பெறவும் வேதியியல் துறை ஆய்வாளர்கள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் வேதியியல் துறை தலைவர் மீனாட்சி, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், போலந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வேதியியல் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டு மலரை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக வெளியிட்டனர்.


Next Story