கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்


கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்
x
தினத்தந்தி 18 March 2019 10:18 PM GMT (Updated: 18 March 2019 10:18 PM GMT)

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோவை,

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், பீகார் உள்பட 13 மாநிலங்களை சேர்ந்த 97 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.ராஜாமணி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டரிடமும் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த வேட்பாளர் கள் ரூ.12,500-ம், பிற வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரமும் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். வேட்பாளர்களுடன் 4 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்பாளர்கள் வரும் வாகனங்கள், உடன் வருபவர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதற்காக கலெக்டர் அலு வலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் இருந்து 100 மீ தூரம் குறிக்கப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுவார்கள். இதற்காக வீடியோகிராபர் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் 27-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை 29-ந் தேதி திரும்ப பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story