ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகித்தால் கடும் நடவடிக்கை - தொழிலாளர் நல ஆய்வாளர் எச்சரிக்கை


ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகித்தால் கடும் நடவடிக்கை - தொழிலாளர் நல ஆய்வாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 4:37 AM IST (Updated: 19 March 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கோத்தகிரி,

கோத்தகிரி தொழிலாளர் நல ஆய்வாளர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், தேயிலை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வித தராசு மற்றும் எடை கற்களில் உரிய முத்திரை பொறித்திருக்க வேண்டும்.

அவ்வாறு முத்திரை இல்லாத தராசு மற்றும் எடை கற்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது தொடர்பான ஆய்வின்போது தராசு மற்றும் எடை கற்களில் முத்திரை இல்லாதது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும். இது மட்டுமின்றி பணியாளர்கள் குறித்த ஆவணங்களை உரிய முறையில் பராமரித்து வர வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை அதன் மீது அச்சிடப்பட்ட விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்க கூடாது. ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்களை வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய விடுமுறை நாட்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட அந்த நாளில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த தொழிலாளர் நல அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதியை பெற வேண்டும்.

தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து, அதன் மூலம் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் இந்த சலுகைகளை தொழிலாளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story