மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல்


மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 March 2019 11:15 PM GMT (Updated: 19 March 2019 8:28 PM GMT)

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் சட்டசபை தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு துணை தாசில்தார் சரசுவதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் நியூட்டன், ஏட்டுகள் ராஜேஷ்குமார், ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 7.15 மணி அளவில் நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக திருப்பதியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது கபிலுதீன் (வயது 30) என்ற வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அந்த பையில் கட்டு, கட்டாக பணம் இருந்தது. இதைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பையை வாங்கி பார்த்த போது அதில் 500 ரூபாய் கட்டுகளாக 48 கட்டுகளும், 2 ஆயிரம் ரூபாய் கட்டுகளாக 5 கட்டுகளும், சில்லரை நோட்டுகளாக ரூ.8 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.34 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது.

அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தான் மதுரையில் இருந்து ஆம்னி பஸ்சில் வருவதாகவும், பணம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும், வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களது உறவினர்களிடம் கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பிய பணத்தை, எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்தை பறிமுதல் செய்து, நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை சரிபார்த்து கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் பிடித்தால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாகர்கோவிலில் நேற்று ரூ.34 லட்சம் பிடிபட்டது தொடர்பாக அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பிடிபட்ட இந்த பணத்தை கேட்டு யாராவது வந்தால் அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து ஒப்படைப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளையம்பலம் பகுதியில் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜி தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை அதிகாரிகள் சோதனை செய்தனர். டெம்போ டிரைவரிடம் ரூ.77 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணத்தை குலசேகரன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது. அந்த பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story