பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது - மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது - மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 7:55 PM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

தமிழகத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 1-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 418 மாணவர்கள், 4 ஆயிரத்து 174 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 592 பேர் எழுதி வந்தார்கள். இதற்காக குன்னூர் கல்வி மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களும், கூடலூர் கல்வி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களும் என்று மொத்தம் 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களை தடுக்க 83 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு போன்ற பாடங்களுக்கான தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.

இந்த தேர்வை நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடைய பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 10 பேரில், 3 ஆயிரத்து 722 பேர் எழுதினர். 288 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 26 பேர் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணிநேரம், சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதி உள்ளனர்.

காலை 10.15 மணி முதல் மதியம் 12.45 மணி வரை 2½ மணி நேரம் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்ததை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி கொண்டனர். புத்தகங்கள், பைகளை தூக்கி போட்டு பிடித்தனர். ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து, மாணவ-மாணவிகள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Next Story