கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் வியூகம்: காங்.-ஜனதா தளம்(எஸ்) இணைந்து பிரசாரம் - தலைவர்கள் கூட்டத்தில் முடிவு


கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் வியூகம்: காங்.-ஜனதா தளம்(எஸ்) இணைந்து பிரசாரம் - தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 19 March 2019 11:30 PM GMT (Updated: 19 March 2019 9:11 PM GMT)

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் நேற்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வியூகம் அமைத்து தேர்தலை சந்திப்பது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அடிமட்டத்தில் இருந்து நிர்வாகிகள் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை இரு கட்சி தலைவர்களும் சேர்ந்து சரிசெய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒற்றுமையாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். கர்நாடகத்தில் நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(அதாவது நேற்று) தொடங்கிவிட்டது. தேர்தல் களத்தில் நிர்வாகிகள் இடையே சில கருத்துவேறுபாடுகள் இருக்கும். அதை நானும், சித்தராமையாவும் சேர்ந்து சரிசெய்வோம்.

தேர்தலுக்கான நேரம் குறைவாக தான் உள்ளது. அதனால் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நான்(தேவேகவுடா) கூட்டாக இணைந்து, பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வருகிற 31-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இதில் கூட்டணியின் பலத்தை நிரூபிப்போம். இது வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்கூட்டமாக அமையும். இதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளோம். இந்த கூட்டம் மூலம் எதிர்க்கட்சிகளாக நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி போகும். இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை ஏற்படும்.

வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு, நிர்வாகிகள் இடையே எழுந்துள்ள சில குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இவை பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை. தீர்க்கப்படக்கூடிய ஒன்று தான்.

நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். கூட்டணியை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும், இரு கட்சிகளின் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூறக்கூடாது. இரு கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். அதாவது ஒரே கருத்தை எடுத்து வைத்து பேச வேண்டும்.

கர்நாடகத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பா.ஜனதாவை இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெற நாங்கள் விடமாட்டோம். காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.

மைசூரு, மண்டியாவில் எழுந்துள்ள சிறிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். மெகா கூட்டணி பற்றி பிரதமர் மோடி மிக மோசமாக விமர்சனம் செய்கிறார். ஆனால் பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை நடத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மோடிக்கு தக்க பதிலை கொடுப்போம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் இணைந்து தீவிர பிரசாரம் செய்வோம்.

நானும், சித்தராமையாவும் ஒற்றுமையாக உள்ளோம். நாங்கள் ஒன்றாக இணைந்து பிரசாரம் செய்து, கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்வோம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டேன்.

இதை எனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கூறினேன். கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, இங்கு இதுவே எனது கடைசி பேச்சு என்று கூறினேன். நான் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்துவிட்டேன்.

ஆனால் எங்கள் கட்சியினர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், என்னை தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனாலும் போட்டியிடுவது குறித்து நான் எனது மனதை இன்னும் தயார்படுத்தவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவை அறிவிப்பேன்.” இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story