காரில் கடத்தப்பட்ட ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் போலீசார் விரட்டி பிடித்தனர்


காரில் கடத்தப்பட்ட ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் போலீசார் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 9:59 PM GMT)

காரைக்கால் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து காரைக்காலில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினம் பிராவிடையனாறு அருகே உள்ள காரைக்கால்- நாகை தேசிய நெடுஞ்சாலையில், திருமலைராயன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வேகமாக சென்ற ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதைத்தொடர்ந்து போலீசார் தங்கள் ரோந்து மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி சென்றனர்.

விரட்டி சென்றனர்

போலீசார் காரை விரட்டி சென்று கொண்டிருந்த போதே வயர்லெஸ் மூலம் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் உள்ள போலீசாரை தொடர்பு கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த காரை நிறுத்துமாறு கூறினர்.

இதைத்தொடர்ந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காரை சாலை நடுவே தடுப்பு வேலிகளை போட்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அங்கும் கார் நிற்காமல், அருகில் உள்ள தனியார் துறைமுக சாலையில் திரும்பியது. அங்கு டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். .

பறிமுதல்

உடனே போலீசார் அங்கு சென்று காரை திறந்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான காரையும், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story
  • chat