புதுச்சேரி எம்.பி. தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது


புதுச்சேரி எம்.பி. தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 10:15 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒரே ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுவை எம்.பி. தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கான அறிவிப்பும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பும் அரசிதழில் முறைப்படி நேற்று வெளியிடப்பட்டது.

பிரதான கட்சிகளான காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்படாத நிலையில் புதுவை எம்.பி. தொகுதியில் அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் போட்டியிடுவதாக கூடப்பாக்கத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அருணிடம் மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் வி.வி.பி.நகரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுமிதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும்.

நேற்று வேட்புமனு தாக்கலின் முதல் நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யும் கலெக்டர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் பணி உள்ளிட்ட முக்கியமான பணிகளுக்காக வந்தவர்கள் மட்டுமே இந்த அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

இங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவண்ணம் துணை ராணுவப்படையினரும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

Next Story