நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும்’ - பிரிதிவிராஜ் சவான் கூறுகிறார்


நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும்’ - பிரிதிவிராஜ் சவான் கூறுகிறார்
x
தினத்தந்தி 19 March 2019 11:30 PM GMT (Updated: 19 March 2019 11:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரியும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவானிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 ஆண்டு காலம் எந்த கட்சியும் 270 தொகுதிகளில் வெற்றி பெற்றதில்லை.

பா.ஜனதா இந்த தேர்தலில் மெஜாரிட்டியை பெறும் என்று பிரதமர் மோடி கூறவில்லை. ஆனால் பா.ஜனதா கட்சியினர் சிலர் அப்படி கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றும் என்று கூற நான் விரும்பவில்லை. எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையின் கீழ் தான் அடுத்த ஆட்சி அமையும்.

270 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பெருமை பேசமாட்டேன்.

எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால் பின்னர் மாநில அளவிலான கூட்டணியை உருவாக்கி மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி தனித்து போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரிதிவிராஜ் சவான், “அவரின் கட்சி காங்கிரசுடன் கூட்டணியில் இணையாதது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் ஏன் அவர்கள் எங்களுடன் இணையவில்லை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவர்களது அணி தனித்து போட்டியிடுவது 100 சதவீதம் பா.ஜனதாவுக்கு உதவிகரமாக அமையும்” என்றார்.


Next Story