வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பார் உரிமையாளர் கைது


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பார் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 5:16 PM GMT)

பாபநாசம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அகரமாங்குடியில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக க திருச்சி மத்திய புலனாய்வு (மதுவிலக்கு) பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை இன்ஸ்பெக்டர் வி.ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அகரமாங்குடிக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதியில் உள்ள அக்ரஹாரத்தெருவில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்தது.


இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை திறந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் வெள்ளை நிற கேன்களில் 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் எரிசாராயத்தை இந்த வீட்டில் பதுக்கி வைத்தது யார்? என விசாரணை நடத்தினர். விசாணையில் வீட்டில் மதுபானத்தை பதுக்கி வைத்தது பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் குச்சிபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் கணேஷ்(வயது40) என்றும் இவர் மதுபான பார் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கணேசை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–


கைது செய்யப்பட்டுள்ள கணேசுக்கு அய்யம்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் அகரமாங்குடியில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். இதனால் சந்தோஷ்குமாரை தேடி வருகிறோம். இந்த எரிசாராயத்தை பிராந்தியாக மாற்றி விற்பனை செய்துவந்துள்ளார். கைது செய்யப்பட்ட கணேஷ் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாரயத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story