பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு


பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 21 March 2019 5:00 AM IST (Updated: 21 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்(தஞ்சை), செ.ராமலிங்கம்(மயிலாடுதுறை), தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவோடு 5 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் வந்து இருக்கிறது. 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏன் வந்தது?. முறைப்படி 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் வந்து இருக்க வேண்டும். மீதமுள்ள 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்து வருகிறோம். நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2 நாட்களாக வரும் தகவலை பார்க்கும்போது மீதமுள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உருவாகி கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி வீட்டிற்கு அனுப்பப்படுவது மட்டுமல்ல, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வர இருக்கிறது.

நான் சொல்லித்தான் இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகிறீர்களா?, இல்லை. நான் சொல்லவில்லை என்றாலும் வாக்களித்து வெற்றி பெற வைக்க போகிறீர்கள். தமிழகத்தில் மக்களை பற்றி சிந்தித்த தலைவர்கள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, இவர்களின் வரிசையில் தலைவர் கருணாநிதி. ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய ஆட்சியா நடக்கிறது?. சிந்திக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, சீரழித்துக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பெரும் புயல் தஞ்சை பகுதியை தாக்கியது. உடனே காமராஜர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நிவாரண உதவிகளை செய்தார். இதை அண்ணா பாராட்டி கடிதம் எழுதினார்.

செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி அணைகள் உடைந்து சென்னையே அழிந்து விடும் என்ற நிலையில் அதிகாலையில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி எழுந்து கோட்டைக்கு சென்றார். அதிகாரிகளை அழைத்து பேசி சென்னையை காப்பாற்றியது வரலாறு. கஜா புயல் வந்தபோது அடுத்த நாளே நான் வந்தேன். எடப்பாடி பழனிசாமி அடுத்த நாள் வந்தாரா?. முதல்-அமைச்சர் ஏன் வரவில்லை? என நாம் குரல் கொடுத்ததால் 5 நாட்கள் கழித்து ஹெலிகாப்டர் மூலம் வந்து பார்த்தார்.

முதல்-அமைச்சர் மட்டுமா? பிரதமர் மோடி நேரடியாக வர மனம் இல்லை என்றாலும் அவரது சார்பில் ஆறுதல் வார்த்தைகளாவது வெளியிடப்பட்டதா? இல்லை. குஜராத் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்து இருந்தால் சும்மா இருந்து இருப்பாரா? தமிழக மக்கள் ஏமாளிகளா? இப்போது தேர்தல் வந்து விட்டதால் தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வந்து செல்கிறார். இப்போது ஏழையின் மகன் என்று மோடி சொல்கிறார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடியேறினால் அவர்களை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்று சொல்வோம். அதேபோல் தான் வெளிநாட்டிலேயே சுற்றி பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வெளிநாட்டு வாழ் பிரதமர். அவருக்கு நமது உணர்வுகள் எப்படி புரியும்.

தி.மு.க. ஆதரவோடு மத்தியில் அமையும் அரசை தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷனில் நியாயம் கிடைக்காது. இறந்தவர் ஒரு முதல்-அமைச்சர். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உலகிற்கு எடுத்து கூறுவது தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை.

நாம் மட்டுமல்ல, தமிழக மக்கள் மட்டுமல்ல, உண்மையான அ.தி.மு.க.வினரும் ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த வினாடியே ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணமானவர்களை சிறையில் அடைப்பது தான் எனது முதல் வேலை. இதை யார் தடுத்தாலும் நான் விடமாட்டேன். இது உறுதி.

இவ்வாறுஅவர் பேசினார்.

கூட்டத்தில் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 7 மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். கீழசன்னதி தெரு, வாசன் நகர், திருவள்ளுவர் நகர், மருதபாடி, முருகையா நகர், வடக்கு வடம்போக்கி தெரு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

அனைத்து பகுதிகளிலும் மு.க.ஸ்டாலினுக்கு மலர் தூவியும், சால்வை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்ற இடங்களில் எல்லாம் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட அனைவருடன் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Next Story