கண்காணிப்பு குழுவினர் கட்சி கூட்டங்களை வீடியோ பதிவு செய்து அறிக்கையாக கொடுக்க வேண்டும் - மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுரை


கண்காணிப்பு குழுவினர் கட்சி கூட்டங்களை வீடியோ பதிவு செய்து அறிக்கையாக கொடுக்க வேண்டும் - மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுரை
x
தினத்தந்தி 21 March 2019 5:00 AM IST (Updated: 21 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கட்சி கூட்டங்களை வீடியோ பதிவு செய்து அறிக்கையாக கொடுக்க வேண்டும் என மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழு தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் இணை ஆணையர் (சுங்கம்) அனிஷ் பி.ராஜன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அனிஷ் பி.ராஜன் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள் ஆய்வு பணியின் போது ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தங்களது ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக உரிய ஆவணமின்றி பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிப்பது, இதர பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் பெறப்பட்டால் இக்குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும், வாகன சோதனையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் குழுவினர் உரிய விபரம் தெரிவித்து சோதனை மேற்கொள்ள வேண்டிய வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கட்சி தொடர்பான கூட்டங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் விளம்பரம், பேனர், போஸ்டர், துண்டு பிரசுரங்கள், பந்தல், மைக் செட், விளக்குகள், துணி மற்றும் கொடி வகைகள், வாகனங்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் பேசக்கூடியதை முழுமையாக வீடியோ பதிவு செய்து அதன் முழு விவரத்தை அறிக்கையாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் போலீசார், பறக்கும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story