மின்னாம்பள்ளியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி


மின்னாம்பள்ளியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 March 2019 4:00 AM IST (Updated: 21 March 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மின்னாம்பள்ளியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தபட்டுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட மின்னாம்பள்ளி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உதவிதேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சரவணமூர்த்தி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் செயல்படும் விதம் குறித்தும், தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சம்பந்தப்பட்ட வாக்காளர் மட்டுமே பார்க்கும் வசதி குறித்தும், அவ்வாறு காண்பிக்கப்படும் தகவல் 7 வினாடிகள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ தங்களுடைய வாக்கை விற்ககூடாது என வலியுறுத்தப்பட்டது. பின்னர் தொழிலாளர்களிடம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. பின்னர், அனைவரும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நேர்மையாகவும், வாக்கினை விற்காமலும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்று அனைத்து தொழிலாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதில் மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெங்கமேடு

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வி.வி.பேட் எனும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்கள் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்து வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டனர். இதில் தாசில்தார்கள் பிரபு(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story