மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பணபரிவர்த்தனை நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - கலெக்டர் மலர்விழி வலியுறுத்தல்


மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பணபரிவர்த்தனை நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - கலெக்டர் மலர்விழி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2019 5:00 AM IST (Updated: 21 March 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பணபரிவர்த்தனை நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் செலவின ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி வலியுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தை கண்டறிவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தலைமை தாங்கினார். மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் அசோக் ராம்ஜி நினாவி, உமேஷ் பதாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி பேசியதாவது:-

உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சராசரி விற்பனையை விட 30 சதவீதம் அதிகமாக விற்பனை நடைபெறும் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். வங்கிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதேபோல் திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளில் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

வேட்பாளர்களின் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்து அதை ஆய்வு செய்ய வேண்டும். சோதனை சாவடிகளில் முழுமையாக வாகன சோதனை செய்ய வேண்டும். (சி விஜில்) ஆப் மூலம் ஆன்லைனில் புகார் செய்தால் 30 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பறக்கும் படை தேர்தல் நன்னடத்தை கண்காணிக்கும் குழு, வீடியோ பதிவு குழு, தேர்தல் செலவினங்கள் பார்வைக்குழு ஆகியவை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் செலவினங்கள் தொடர்பான விவரங்களை வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், செலவின கணக்கு குழுவினர் பறக்கும் படை, சோதனைச்சாவடி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story