சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை டி.டி.வி.தினகரன் பேட்டி


சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 8:36 PM GMT)

சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என திருச்சியில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திருச்சி,

நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். யார் எந்த தடை ஏற்படுத்தினாலும் நாங்கள் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் இருந்த போதும் நாங்கள் வெற்றி பெற்றோம். திருவாரூர் தேர்தல் நடத்தியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என கருதி தேர்தலை தள்ளி வைத்தனர். இப்போது நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்.

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை மத்திய, மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து புயல் அடிக்க போகுது, ஏப்ரல் 18-ந்தேதி பூகம்பம் வரப்போகிறது என ஏதாவது வானிலை அறிக்கை பெற்றுக்கொண்டு தேர்தலை நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்.

அ.ம.மு.க. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் (அதாவது நாளை) அறிவிக்கப்படும். 22-ந்தேதி (அதாவது நாளை) மாலை 5 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடுவேன். அ.தி.மு.க. வில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் உள்ளனர். தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்கள் பக்கம் வந்துவிட்டனர்.

தேனி தொகுதியில் நான் போட்டியிடுவேனா? என்பது அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலில் தெரிந்து விடும். குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வருகிற 26-ந்தேதி எங்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். வருகிற 27-ந்தேதி முதல் முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். எங்களுக்கு நேரடி போட்டி என்று யாரும் கிடையாது. எங்களது வெற்றி உறுதியாகி விட்டது.

சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தின் மீது தான் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கவில்லையென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தேர்தலில் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் மனோகரன், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திருச்சி தொகுதி வேட்பாளரின் அரண்மனை வளாகத்தில் தேர்தல் அலுவலகத்தை டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார்.

முன்னதாக டி.டி.வி.தினகரனை வரவேற்று அ.ம.மு.க.வினர் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி அருகில் இருந்த காய்ந்த மரத்தின் மீது விழுந்து கிளையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட கட்சியினர் உடனடியாக அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story