இணையதளம் மூலம் அறிமுகமாகி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துச்சென்று என்ஜினீயரிடம் நகை-பணம் பறிப்பு - 2 பேர் கைது


இணையதளம் மூலம் அறிமுகமாகி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துச்சென்று என்ஜினீயரிடம் நகை-பணம் பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2019 4:45 AM IST (Updated: 21 March 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

இணையதளம் மூலம் அறிமுகமாகி என்ஜினீயரை ஓரினசேர்க்கைக்கு அழைத்துச்சென்று அவரை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் சிவநேசன். இவர் நேற்று காலை 6 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் கோவையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வாங்க சென்றார். அவர் கே.கே.புதூர் கணபதி லே-அவுட் பகுதி அருகே வந்தபோது திடீரென்று அவரை 2 பேர் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்தனர்.

உடனே அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்து அவர்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களிடம் இருக்கும் கத்திகளை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் மேட்டுப்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றபோது திடீரென்று அங்கு நின்றிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயன்றனர்.

உடனே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 21), விக்னேஷ் (21) என்பதும் சிவநேசன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

பிரபாகரன், விக்னேஷ் 2 பேரும் கணினி இயக்குவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் வேலை செய்து வரும் மெக்கானிக் தொழிலில் வருமானம் குறைவு. எனவே வருமானம் அதிகமாக கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, இணையதளத்தில் சாட்டிங் செய்து பலரை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பலரை இணையதளம் மூலம் சாட்டிங் செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் சம்பாதித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் 23 வயது வாலிபரிடம் இணையதளம் மூலம் அறிமுகம் ஆனார்கள். பின்னர் அவரை ஓரினச்சேர்க்கைக்காக கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் ஓரினச்சேர்க்கையும் வைத்துக்கொண்டனர்.

பின்னர், திடீரென்று அவர்கள் இருவரும் என்ஜினீயரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, அவரிடம் இருந்த ரூ.9 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுபோன்று பலரிடம் அவர்கள் இருவரும் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இவர்கள் 2 பேரிடம் பணம், நகை பறிகொடுத்தவர்கள் புகார் செய்யலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story