தேர்தல் விறுவிறுப்பு இல்லாத கன்னியாகுமரி தொகுதி 2-வது நாளிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை


தேர்தல் விறுவிறுப்பு இல்லாத கன்னியாகுமரி தொகுதி 2-வது நாளிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 21 March 2019 3:45 AM IST (Updated: 21 March 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு இல்லாமல் அமைதியாக உள்ளது. நேற்று 2-வது நாளாகவும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இதுதவிர அ.ம.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக எபிநேசரை கமல்ஹாசன் நேற்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்னும் பிரசாரத்தை தொடங்காததால் கன்னியாகுமரியில் தேர்தல் விறுவிறுப்பு இல்லாமல் உள்ளது. தொண்டர்கள் இடையே சோர்வும் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் எங்கும் சுவர் விளம்பரங்களோ, கட்சி கொடிகளோ, சின்னங்களோ இல்லை.

நாகர்கோவில் நகர் பகுதியில் உள்ள கொடிகம்பங்கள், அதற்கான பீடங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். வேட்பாளர்களும் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அலுவலகம் திறப்பது போன்ற எந்தவொரு பிரசார வேலைகளையும் தொடங்காததால் கன்னியாகுமரி தொகுதி தேர்தல் களை இழந்து காணப்படுகிறது.

இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. கன்னியாகுமரி தொகுதியில் முதல்நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனினும் முதல் நாளில் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாங்கிச் சென்றனர்.

இதேபோல் 2-வது நாளான நேற்றும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். இதுவரை மொத்தம் 15 பேர் வேட்பு மனுக்களை வாங்கியுள்ளனர்.

Next Story