அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 9:10 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல்-மோகனூர் சாலையில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ். காளியப்பன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில் சுதந்திரம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு , பா.ம.க. துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ், பா.ஜனதா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு அவரது வழியில் சீரிய முறையில் நலத்திட்டங்களை செயலாற்றி வருகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம். அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. வேட்பாளர் அறிவிக்கும் நாளுக்கு முந்தைய நாள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. வினர் ஒப்புதல் கடிதம் கொடுத்து விட்டனர். எனவே தான் அவர்கள் வேட்பாளர் அறிவிக்கும் நாளில் வரவில்லை.

தேர்தல் அறிக்கையை பொறுத்தவரையில் நாங்கள் மக்களுக்கு எதை செய்ய முடியுமோ அதை தான் வாக்குறுதியாக கொடுத்து உள்ளோம். ஆனால் தி.மு.க.வினர் 2006-ம் ஆண்டு அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவோம் என கூறி ஏமாற்றியது போல, இப்போதும் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளனர்.

கருத்து கணிப்பு பலமுறை பொய்த்து போய்விடும். எங்களை பொறுத்தவரையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story