வருசநாடு அருகே, செங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்


வருசநாடு அருகே, செங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே செங்குளம் கண்மாயில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே ஓட்டணை கிராமத்தில் சுமார் 69 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு தங்கம்மாள்புரம் அருகே, மூலவைகை ஆற்றில் இருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. மூலவைகை ஆற்றில் நீர்வரத்து உள்ள நாட்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பும்.

ஓட்டணை, நரியூத்து, செங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதி ஆதாரமாக இந்த கண்மாய் திகழ்கிறது. கண்மாயில் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் கண்மாயை முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

இதேபோல் கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக நாளுக்குநாள் கண்மாயின் பரப்பு குறைந்து வருகிறது. மேலும் கண்மாய் தூர்வாரப்படவில்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு கண்மாய் நிரம்பினாலும், விரைவில் தண்ணீர் வற்றி விடுகிறது.

கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி செங்குளம் கண்மாயில், அனுமதியின்றி கரம்பை மண்ணை ஒரு கும்பல் அள்ளி செல்கின்றனர். இதன்காரணமாக கண்மாயில் பெரும்பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கண்மாயில் கரம்பை மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story