முகப்பேரில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 7 கடைகள் எரிந்து நாசம்


முகப்பேரில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 7 கடைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 March 2019 3:30 AM IST (Updated: 21 March 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

முகப்பேர் மேற்கில், வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து நாசமானது.

பூந்தமல்லி,

சென்னை முகப்பேர் மேற்கு, 2–வது பிரதான சாலையில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான 2 தளங்கள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இதில் ஓட்டல், பழக்கடை, அழகு நிலையம் உள்ளிட்ட 7 கடைகள் இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடைக்காரர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று அதிகாலையில் இந்த வணிக வளாகத்தில் இருந்து புகை வருவதாக வந்த தகவலின்பேரில் அம்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாராயணசாமி, விஜயகுமார், லட்சுமணன் ஆகியோர் தலைமையில் அம்பத்தூர், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி வணிக வளாகத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் பழக்கடை, அழகு நிலையம், ஓட்டல் உள்பட வணிக வளாகத்தில் இருந்த 7 கடைகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீப்பிடித்து எரியும்போது ஓட்டலில் இருந்த சிலிண்டர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story