திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 10:00 PM GMT (Updated: 20 March 2019 9:45 PM GMT)

திருப்பூர் பாரப்பாளையத்தில் உரிய ஆவணம் இன்றி பனியன் நிறுவன உரிமையாளர் கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் இருக்க வேண்டும்.

அவ்வாறு ஆவணம் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர்–மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் சிவசக்திநகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் இளமணிமாறன் காரில் வந்தார். அதிகாரிகள் சோதனையின் போது அவரது காரில் ரூ.3 லட்சம் இருந்தது.

இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர் தனது நிறுவனத்தில் உள்ள பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உரிய ஆவணங்களை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து பணத்தை பெற்றுச்செல்லலாம் எனவும் அறிவுறுத்தினர்.


Next Story