தி.மு.க. ஆட்சியில் ‘நீட்’ தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும் - கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தையாபுரத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதாவும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வும் வெற்றி பெறாது. ஒருவேளை வெற்றி பெற்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றே தீர வேண்டும்.
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். அப்போதுதான் இங்கே ஸ்டெர்லைட் ஆலையால் நாம் பறிகொடுத்த 13 பேர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு விடிவு ஏற்பட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாக மாற வேண்டும் என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தென்திருப்பேரையில் உள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பாசிச கொள்கைகளைக் கொண்ட பா.ஜனதாவின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரிதும் வேதனைப்படுகின்றனர். தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்து, தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், தங்கள் மீது எந்த வழக்குகளும் பாயாமல் இருக்கவுமே அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜனதா அரசுக்கு காவடி தூக்கி வருகிறது. எனவே மத்தியில் பா.ஜனதா அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் அகற்றப்பட வேண்டும்.
தி.மு.க.வைப் போன்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி உள்ளனர். நீட் தேர்வை பா.ஜனதா அரசு திணித்தபோது, அதனை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாததால், ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. கபட நாடகமாடுகிறது. தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்.
50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள், கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிப்பேன் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடியால், வங்கிகளின் வாசலில் தவம் கிடந்த 122 அப்பாவி ஏழைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆனால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. மாறாக வீடுகளில் வைத்திருந்த சிறுசேமிப்புகள்தான் ஒழிந்தன. மேலும் ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் சிறு குறு தொழில்களும் அழிந்தன. இதனால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
பல லட்சம் கோடி ரூபாயை தன்னுடைய நண்பர்களான சில பெரு நிறுவன முதலாளிகளுக்கு பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதனால் ஆண்டுதோறும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஆழ்வார்திருநகரி வடக்கு ரத வீதியில், திருச்செந்தூர் கீழ ரத வீதியில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), பார்த்தீபன் (ஆழ்வார்திருநகரி மேற்கு), தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story