சின்னதடாகம் அருகே, மளிகைக்கடைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் பீதி
சின்னதடாகம் அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
துடியலூர்,
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை மற்றும் பயிர் வகைகளை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டு உள்ளது.
இருப்பினும் சில யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்டகாசம் செய்த காட்டு யானைகள் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சின்னதடாகம் அருகே உள்ள சோமனூர் திருவள்ளுவர் நகரில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள மளிகைக்கடையின் ஷட்டரை உடைத்து, கடைக்கு புகுந்து அங்கிருந்த அரிசியை தின்றும், வெளியே வீசி எறிந்தும் நாசப்படுத்திஅட்டகாசம் செய்தன. சத்தம் கேட்டு கடையின் உரிமையாளர் ஆறுமுக பாண்டியன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது காட்டு யானை ஒன்று குட்டியுடன் நின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story