நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்


நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 7:09 PM GMT)

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

ஊட்டி, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அவினாசியை சேர்ந்த முன்னாள் எம்.பி. எம்.தியாகராஜன் (வயது 59) போட்டியிடுகிறார். அவர் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் நேற்று மனுதாக்கல் செய்தார்.

பின்னர் அவர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.அர்ஜூணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் ஆகியோர் வந்தனர்.

முன்னதாக ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ. அரங்கில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஸ்டேட் வங்கி வரை வந்தனர். இதில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் வருவதற்கு நேரம் ஆனதால் மதியம் 2.45 மணிக்கு வேட்பாளர் உள்பட 5 பேர் காரில் வந்து மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளருக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. ஒரு வேட்புமனு படிவத்தை வாங்கி சென்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளரிடம் கை இருப்பு ரூ.75 ஆயிரம், மனைவியிடம் ரூ.25 ஆயிரம், மகன்களிடம் ரூ.15 ஆயிரம் கை இருப்பாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், எம்.தியாகராஜன் பயன்படுத்தும் 2 கார்கள், நகை, வங்கிகளில் இருப்பு உள்பட மொத்த சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 99 ஆயிரத்து 266 ஆகும்.

அவரது குடும்பத்தினருக்கு கார், நகைகள், வங்கி இருப்பு என சொத்து மதிப்பு ரூ.18 லட்சத்து 81 ஆயிரத்து 56. மகன்கள் இருசக்கர வாகனம் உள்பட சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 713 ஆகும். திருப்பூரில் சொந்த நிலம் உள்ளது. கோவையில் விவசாயம் அல்லாத நிலம் உள்ளது. அவினாசியில் வீடு உள்ளது என சொத்து விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே நஞ்சநாடு கக்கன்ஜி காலனியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவரது மகள் மணிமேகலை (27). திருமணம் ஆகவில்லை. இவர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மணிமேகலை நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனுதாக்கல் செய்தார். நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒரே நாளில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மணிமேகலையிடம் கார், நகைகள் என மொத்தம் ரூ.7 லட்சத்து 27 ஆயிரம் 188 சொத்து மதிப்பு உள்ளது.

Next Story