3 பேரை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு 4 பேர் தீக்குளிக்க முயற்சி


3 பேரை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு 4 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 23 March 2019 4:30 AM IST (Updated: 23 March 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

சந்தேகத்தின் பேரில் கைது செய்த 3 பேரை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு 2 பெண்கள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் தூசியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூசி,

வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 33), மணல் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (31), சின்ன வேளச்சேரி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (31) ஆகிய 3 பேரை நேற்று அதிகாலை தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் தூசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

வெகுநேரமாகியும் ஜெகன் வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் மோகனாம்பாள், கிருஷ்ணவேணி, பாலமுரளி, தங்கதுரை ஆகியோர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்த ஜெகன் உள்ளிட்ட 3 பேரை விடுவிக்கக்கோரி தூசி போலீஸ் நிலையம் எதிரில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். இருப்பினும் 3 பேரையும் விடுவித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜேசுராஜ், தேவநாதன், இன்ஸ்பெக்டர் ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்தவர்கள் செய்யாறு உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும், எப்போது கூப்பிட்டாலும் 3 பேரும் வர வேண்டும் என்று அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பின்னர் மாலை சுமார் 6 மணியளவில் அவர்கள் 3 பேரையும் அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story