ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை


ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை
x
தினத்தந்தி 23 March 2019 4:13 AM IST (Updated: 23 March 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை செய்து முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

கமுதி,

கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பழனிக்குமார் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரையை சேர்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் ரூ.62 ஆயிரம் எடுத்து வந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாடாளுமன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த முத்துவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் சி.கே.மங்கலத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரைக்குடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடமிருந்து ரூ.54 ஆயிரத்தை கைப்பற்றினர்.

சாயல்குடியை அடுத்த புல்லத்தை விலக்கு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆத்திராவை சேர்ந்த ரத்தினமையா என்பவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பரமக்குடி தாலுகா போகலூர் யூனியன் சத்திரக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த ராவுத்தர் கனி (வயது 30) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.


Next Story