திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.-பா.ம.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி, நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான டி.ஜி.வினயிடம், தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் உறுதிமொழியை வாசித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோர் உடன் வந்தனர்.
இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியின் மனைவி பரமேஸ்வரி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவரும் உறுதிமொழி வாசித்தார். அப்போது தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரும் நேற்று தனது வேட்புமனுவை கலெக்டர் டி.ஜி.வினயிடம் தாக்கல் செய்தார். பின்னர் உறுதிமொழி வாசித்தார். அப்போது முன்னாள் மேயரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான வி.மருதராஜ், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு, பா.ஜனதா மாவட்ட தலைவர் பழனிச்சாமி, த.மா.கா. நிர்வாகி ரித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பா.ம.க. சார்பில் மாற்று வேட்பாளராக பரசுராமன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று நிர்வாகிகள் கூறினர். ஆனால், அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மற்றொரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இதையொட்டி நடிகர் மன்சூர்அலிகானும் தனது வேட்புமனுவை தாக்கல் நேற்று செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story