திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரம்: கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரம்: கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 2:13 PM GMT)

திருப்பூரில் பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.14 லட்சத்தை மர்ம ஆசாமிகள் துணிகரமாக திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியசுந்தரி (39). இவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செந்தில்குமாரும், சத்தியசுந்தரியும் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சத்தியசுந்தரி, கணவர் வராத நிலையில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று இருக்கிறார்கள்.

இதுகுறித்து சத்தியசுந்தரி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் மர்ம ஆசாமிகளின் ரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பின்னர் பணம் இருந்த பீரோவின் லாக்கரை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து பணத்தை திருடி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருட்டு நடந்த வீட்டில் வெவ்வேறு அறைகளில் மொத்தம் 4 பீரோக்கள் இருந்தன. அதில் ஒரு பீரோவில் மட்டுமே பணம் வைக்கப்பட்டிருந்தது. திருட சென்ற மர்ம ஆசாமிகள் மற்ற 3 பீரோக்களை திறந்து பார்க்காமல் சரியாக பணம் இருந்த பீரோவை மட்டும் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

மேலும் கணவன்–மனைவி இருவரும் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் நேரத்தை நன்கு அறிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சத்தியசுந்தரிக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும், அல்லது அவர் வீட்டு சூழல் தெரிந்தவராக இருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். எனவே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடமும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

சமீபத்தில் கணவர் நிலத்தை விற்று அதற்கான ரூ.14 லட்சத்தை பீரோவில் வைத்து இருந்தார். தற்போது அந்த பணம் திருடப்பட்டு உள்ளது. எனவே கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் யாரேனும் அவரை நோட்டமிட்டு வீட்டை அடையாளம் கண்டு திருடி சென்றார்களா? எனவும் சந்தேகம் இருப்பதாகவும் சத்தியசுந்தரி போலீசில் தெரிவித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

திருப்பூர் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story