ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18–ந் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகிறார்கள். உரிய ஆவணங்களை காட்டியபின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் பவானி அடுத்துள்ள மாரப்பம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நிலைக்குழு அதிகாரி மிதுன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதில் பயணம் செய்தவரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 195 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் கோவை மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கெங்கநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26) என்பவர் என்றும், அவர் தாராபுரத்தில் செயல்படும் ஒரு காடை விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக வேலை பார்ப்பதாகவும், காடை விற்ற பணம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 195 வசூல் செய்து வருவதாகவும் கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. அதனால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பவானி தாசில்தார் வீரலட்சுமியிடம் ஒப்படைத்தார்கள்.
இதேபோல் சேலம் மாவட்டம் சின்னபள்ளம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் ஒருவர் வந்தார். அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்தது அவர் 70 ஆயிரத்து 60 ரூபாய் வைத்திருந்தது தெரிந்தது.
அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடலை சேர்ந்த கார்த்தி என்றும், வீடு கட்டிக்கொடுக்கும் காண்டிராக்டரான அவர் தொழிலாளர்கள் பணம் கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை. அதனால் அந்த பணத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி தாசில்தாரிடம் ஒப்படைத்தார்கள்.
சத்தி–மேட்டுப்பாளையம் ரோட்டில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தேர்தல் பறக்கும் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக கேரளாவை சேர்ந்த ஜோஸ்வர்க்கீஸ் (55) என்பவர் காரில் வந்தார். உடனே அதிகாரிகள் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் அவரிடம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூரில் பட்டு சேலை வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக கூறிய அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. அதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சத்தி தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்கள்.
நம்பியூரில் பஸ் நிலையம் முன்பு நேற்று அதிகாலை 4 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உமாபதி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோபி அருகேயுள்ள அக்கரை கொடிவேரிக்கு ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது.
தேர்தல் பறக்கும் படையினர் வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது வேனை ஓட்டிவந்த சுப்பிரமணி என்பவரிடம் இருந்து, உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். பின்னர் அந்த பணத்தை நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று ஒரேநாளில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 755 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.