நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்


நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 7:47 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டம் தொடங்கப்படுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர், மருக்காலங்குறிச்சி, கொம்மேடு, தண்டலை, கீழக்குடியிருப்பு, புதுக்குடி, தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்திற்காக நிலங்களை கையகப்படுத்தியது. இதில் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஜெயங்கொண்டத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரை உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதில் அதிருப்தியடைந்த மேலூர் கிராம மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அதே கோரிக்கையை வலியுறுத்தி தண்டலை கிராம மக்கள் நேற்று முன்தினம் கூட்டம் நடத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து நேற்று அக்கிராமத்தில் தெருக்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதேபோன்று கீழக்குடியிருப்பு கிராமங்களிலும் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து இருப்பது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story