‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு


‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 23 March 2019 11:30 PM GMT (Updated: 23 March 2019 8:24 PM GMT)

‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார்.

சாத்தூர்,

 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கேசுகுண்டு சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.

சாத்தூர் முக்குராந்தால், படந்தால் பகுதியில் நேற்று பிரசாரம் செய்த போது வைகோ பேசியதாவது:–

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் திராவிட கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியிலே அமைக்கின்ற மந்திரி சபையில் ராகுல் காந்தியே பிரதமர் பொறுப்பு ஏற்பார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கியமான கேள்வி, இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா, பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரே மதம், ஒரே மொழி என்ற அடிப்படையிலே கடந்த 5 ஆண்டு காலமாக பிரதமர் மோடி செயல்பட்டு வந்துள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுப்ரீம் கோர்டு தீர்ப்பு கொடுத்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம், பென்னிகுவிக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

தஞ்சை மண்ணில் பலவகையான எரிவாயுவை எடுத்தால் இந்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடிகள் கிடைக்கும். தனியார் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கணக்கிலான கோடிகள் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் சொந்தநாட்டிலேயே அகதிகளாக மாறுவார்கள். இப்படிப்பட்ட கொடிய திட்டத்தின் மூலமாக வேதனைகளை கொடுத்த மத்திய அரசு தேவையா? என்பதை தீர்மானிக்கும் நேரம் இது.

பயிர் காப்பீடு வழங்கப்படும் என்றார்கள், கொடுத்தார்களா? இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்த மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். வருடத்திற்கு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்படும் என மோடி கூறினார். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. பேனா நிப், தீப்பெட்டி, பட்டாசு தொழில்களை நம்பி சாத்தூர் மக்கள் வாழ்கிறார்கள். உங்கள் வாழ்வு சிறக்க, மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். அதற்கு மக்களான நீங்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கோசுகுண்டு சீனிவாசனையும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரையும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், மண்குண்டான்பட்டி, வெம்பக்கோட்டை, முத்துசாமிபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய, பட்டாசு தொழில் தற்போது பட்டுப்போய் விட்டது. தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு 2010–ம் ஆண்டில் துணை முதல்–அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.700 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வரை முழுமை அடையவில்லை. பல கிராமங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை நிலவி உள்ளது.

இடைத்தேர்தலுக்கு காரணமான சட்டமன்ற உறுப்பினர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் வாழ்வதாரம் இழந்து தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கண்ணீரை துடைக்கப்படவில்லை. எனவே தேர்தலை பயன்படுத்தி தூக்கி எறியுங்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக பதவி ஏற்று மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவார்.

இவ்வாறு வைகோ கூறினார்.


Next Story