கேரளாவிற்கு கடத்த இருந்த 380 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
கேரளாவிற்கு கடத்த இருந்த 380 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:– நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் தேர்தல் விதிகளின் படி கூட்டங்கள் நடத்துபவர்கள் முன் அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும். மாவட்டத்தில் பணப்புழக்கத்தை தடுக்கவும், தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கவும், மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகன சோதனை உள்பட மாவட்டத்தில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் எஸ்.புதூரை அடுத்த உலகம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனுமதியின்றி அ.ம.மு.க. கூட்டம் நடப்பதாக பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி பறக்கும்படை தாசில்தார் சுமதி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான பறக்கும்படையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி அ.ம.மு.க. கட்சி சார்பில் கூட்டம் நடத்தியது தெரிந்தது. அத்துடன் அங்கு இருந்த முத்துசாமி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் இருந்தது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு வந்ததாக தெரிகிறது. அதை அதிகாரிகள் பறிமுதல் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக உலகம்பட்டி போலீஸ்நிலையத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே தேர்தல் விதிகளை மீறியதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகவும், சிவகங்கை மாவட்டத்தில் தான் முதன் முதலாக அரசியல் கட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை அனுமதியின்றி கூட்டம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி, காரைக்குடி தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் புதுவயல் பகுதியில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த ஒருலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்கள் கேரளாவிற்கு அரிசி மூடைகள் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். அந்த லாரியில் இருந்த அரிசியை சோதனை செய்த போது, அது ரேஷன் அரிசி மூடைகள் என்பது தெரிந்தது. அதைதொடர்ந்து லாரியில் இருந்த 380 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி பணம் கொண்டு சென்றதாக 6 பேர்களிடம் இருந்து ரூ.4லட்சத்து 76ஆயிரத்து 111–ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.