மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு : காங்கிரஸ்-26, தேசியவாத காங்கிரஸ்-22 தொகுதிகளில் போட்டி


மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு : காங்கிரஸ்-26, தேசியவாத காங்கிரஸ்-22 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 24 March 2019 12:15 AM GMT (Updated: 23 March 2019 9:09 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி விவரங்களை நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதில் காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் களம் இறங்கி இருக்கின்றன.

பா.ஜனதா 25, சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பா.ஜனதா- சிவசேனா கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி வியூகம் வகுத்தன. மெகா கூட்டணியில் பாரிப் பகுஜன் மகாசங் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்ததால், அவர் தனது வன்ஜித் பகுஜன் அகாடி கூட்டணி தனியாக போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார்.

இது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரு கட்சிகளும் தொகுதி பங்கீட்டில் மும்முரம் காட்டின. இருப்பினும் தொகுதி பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இவ்விரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன? என்ற விவரங்கள் தெரியாமலேயே இருந்து வந்தது.

அதே நேரத்தில் 2 கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டன. இதன்படி காங்கிரஸ் கட்சி இதுவரை 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

இந்தநிலையில், நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு விவரங்களை மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதன்படி காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். தங்களது கூட்டணிக்கு 56 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக தெரிவித்தனர்.

மெகா கூட்டணியில் இணைய மறுத்த வன்ஜித் பகுஜன் அகாடியை பா.ஜனதாவின் ‘பி' அணி என பெயர் குறிப்பிடாமல் இருவரும் விமர்சித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஹட்கனங்கலே தொகுதியை சுவாபிமானி சேத்கரி சங்கட்னா தலைவர் ராஜூ செட்டி எம்.பி.க்கு ஒதுக்கி உள்ளது. மேலும் இன்னொரு தொகுதியை அந்த கட்சி யுவ சுவாபிமான் கட்சி எம்.எல்.ஏ. ரவி ரானாவுக்கு கொடுக்கிறது.

இதேபோல காங்கிரஸ் பால்கர் தொகுதியை பகுஜன் விகாஸ் அகாடி கட்சிக்கும், மற்றொரு தொகுதியை ராஜூ செட்டியின் சுவாபிமானி சேத்கரி சங்கட்னா கட்சிக்கும் கொடுக்கிறது.

Next Story