தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை கலெக்டர் தகவல்


தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் 18 பறக்கும் படை, ரோந்து குழுக்கள் என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பாக பொதுமக்களால் அளிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் இதுவரை ரூ.17 லட்சத்து 81 ஆயிரம் மற்றும் ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின மேற்பார்வையாளர்களான சஞ்சய் முகர்ஜி, மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில், பறக்கும்படைக்குழு, நிலையான கண்காணிப்புகுழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்வையிடும் குழு மற்றும் கணக்கு அலுவலர்கள், உதவி தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story