பணி நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு தடை
பணி நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ரெயில்வே பாதுகாப்பு படைபோலீசார் பணி நேரத்தின் போது செல்போனில் மூழ்கிவிடுவதாக புகார்கள் எழுந்தன. அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் செல்போனே கதி என இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பல அதிகாரிகளே, மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்து இருந்தனர்.
இந்தநிலையில் பணியின் போது செல்போன் பயன்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பணிக்கு வரும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் செல்போனை ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடவேண்டும். பணி முடிந்து செல்லும் போது, அவர்கள் செல்போனை வாங்கிக்கொள்ளலாம். பணி நேரத்தில் தொடர்புகொள்ள பாதுகாப்பு படையினர் வாக்கி டாக்கியை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
அவசரகாலங்களில் தொடர்பு கொள்ள வசதியாக ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்தின் தொலைபேசி (லேண்டு லைன்) எண்ணை குடும்பத்தினரிடம் கொடுத்து வைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த முடிவுக்கு ரெயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story