கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகோ பேச்சு
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என வைகோ கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தி.மு.க. தென்காசி வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரதவீதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் ஒலித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயகமா, பாசிச கொள்கையா என்பதே கேள்வி. தி.மு.க. கூட்டணி எல்லா சமயங்களையும் மதிக்கின்ற கூட்டணி. கடந்த 5 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடந்து வந்திருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என மோடி தெரிவித்தார். அவர் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் பாதுகாப்பின்றி செல்லும் நிலை உள்ளது. பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சியின் பின்னணி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு துணை போகிறது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. டெண்டர் விடுவதில் ஊழல், குட்காவில் ஊழல். இத்தகைய நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.