ஜெயலலிதா கூறியது போல 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் எச்.ராஜா பேச்சு
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் வரை தொடரும் என்று எச்.ராஜா பேசினார்.
மானாமதுரை,
மானாமதுரை அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர கழகம் சார்பில் தனி தனியாக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நாடாளுமன்ற வேட்பாளர் எச்.ராஜா, சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர் கீழநெட்டூர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எச்.ராஜா பேசியதாவது:– தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்சி 2 அல்லது 3 மாதங்கள் தான் நடக்கும் என்று கூறினர்.
ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்னாள் முதல்–அமைச்சர் எனக்கு பிறகும் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும் என்று சொன்னார். அவர் கூறியது போல, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் செயல்படும் என்றார்.
தொடர்ந்து செந்தில்நாதன் எம்.பி. பேசியதாவது, பா.ஜ.க.வில் உள்ள முக்கிய சக்தி வாய்ந்த நபர்களில், எச்.ராஜாவும் ஒருவர். அவர் வெற்றி பெற்றால் சிவகங்கை தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார். இதேபோல சட்டமன்ற இடைதேர்தலில் நிற்கும் நாகராஜன் மிக எளிமையானவர். எனவே அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் விஜிபோஸ், யூனியன் சேர்மன் மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் விளத்தூர் நாடராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் அன்னாவாசல் கனேசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.