மோடிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது பண்ருட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மோடிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது பண்ருட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 5:00 AM IST (Updated: 25 March 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பதாக பண்ருட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பண்ருட்டி,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேசை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சாலையில் திறந்த காரில் நின்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அலை உருவாகி இருக்கிறது. உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவர் சொன்னபடி உங்கள் வங்கி கணக்கில் பணத்தை போட்டாரா? உங்களுக்கு பெரிய நாமத்தைதான் போட்டார். நாமத்தை போட்டுவிட்டு என்ன தைரியத்தில் உங்களிடம் திரும்ப வந்து வாக்கு கேட்கிறார். அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?

இரவோடு இரவாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதைக் கேட்டால் புதிய இந்தியா பிறக்கப்போகிறது என்றார். புதிய இந்தியா பிறந்ததா? தீவிரவாதிகளை ஒழித்து விடுவேன் என்றார். ஒழித்து விட்டாரா? கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் இந்தியாவில் புகுந்து மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் 40 இந்திய வீரர்களையும் கொன்றுவிட்டார்கள். இதுதான் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்ட லட்சணமா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?

பண மதிப்பிழப்பால் எத்தனை வியாபாரிகள் தொழிலை இழந்துள்ளனர். இந்தியாவுக்கு வில்லன் மோடிதான். இந்த வில்லனை ஆட்சியை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல் பாதிப்புக்கு நிவாரணமாக கேட்ட தொகையில் 10 சதவீதம் தான் பிரதமர் அனுப்பியுள்ளார். குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யாருக்கு என்ன பயன்.

அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி இல்லை. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் 20 ஆண்டுகளாக முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் செய்து வரும் நல்ல வேட்பாளர். உங்கள் தொகுதியின் குறைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நல்ல காரியங்களை செய்து தருவார். அவருக்கு நீங்கள் பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள பாலூரில் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி மாணவி அனிதாவை கொன்றுவிட்டார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் பட்டப்பகலில் 14 பேரை கொலை செய்து இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்கிறார்கள். கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்றால் வில்லன் யார்.(அப்போது அங்கே திரண்டு நின்ற கட்சியினர் மோடி என்றனர்.)

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறினார்கள். அதை கண்டுபிடித்தார்களா? இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் ஜெயலலிதாவின் சாவுக்கு காரணம் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்.

கலைஞரின் பேரனாக, தளபதியின் மகனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். வேட்பாளர் ரமேசை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பண்ருட்டியில் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், முன்னாள் கவுன்சிலர் சிவா தலைமையிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தணிகைசெல்வம், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், திரைப்பட சங்க முன்னாள் பொதுச்செயலாளர் மாருதி ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தி ,ஊராட்சி செயலாளர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் வாக்குகளை சேகரித்தார். பின்னர் அவர் புதுச்சேரிக்கு புறப்பட்டுசென்றார். முன்னதாக கடலூர் கோண்டூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர் சுப்புராம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story