நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் செதுக்கப்பட்ட கற்கள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தார்களா? அகழாய்வு நடத்த கோரிக்கை
சென்னிமலை அருகே நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் செதுக்கப்பட்ட கற்கள் காணப்படுகிறது. எனவே இங்கு 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா? என்பது குறித்து அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது நஞ்சுண்டாபுரம். இங்குள்ள வனப்பகுதியில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பாக உருவான நஞ்சுண்டேசுவரர் சாமி உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத திங்கட்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவில் உள்ள வனப்பகுதியின் உச்சியில் செவ்வக வடிவில் சுமார் 5 அடி உயரம் உள்ள செதுக்கப்பட்ட கருங்கற்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அதன் அருகிலேயே சுற்றுச்சுவர் அமைத்தது போல் கற்குவியல்களும் காணப்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் சாய்வாக உள்ள ஒரு சிறிய பாறையில் பல்லாங்குழி விளையாடுவதற்கு ஏற்றது போன்று 10 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை “பாண்டியன் குழி“ என அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மேலும், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் கூறுகையில், ‘நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியின் முன்புறத்தில் பாலதொழுவு குளம் உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் இந்த குளம் அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பழமையான குளம் ஆகும்.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இந்த குளத்தில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி நிற்கும். அப்போது அலை அடித்துக் கொண்டு கடல் போல காட்சி அளிக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நஞ்சுண்டேசுவரர் கோவில் வாசல் வரை தண்ணீர் தேங்கி நின்றதாக என்னுடைய முன்னோர்கள் கூறி உள்ளனர். அதனால் அந்த கால கட்டங்களில் பாதுகாப்பு காரணமாக இந்த வனப்பகுதியின் உச்சியில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். என்னுடைய தாத்தா, என்னுடைய தாத்தாவின் தாத்தா என தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்தவர்கள் அனைவருமே நஞ்சுண்டாபுரத்தில் பாண்டியர்கள் வாழ்ந்து வந்ததாக கூறியதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்கள் சுமார் 3 அடி உயரம் மட்டுமே இருந்ததாகவும், அதனால் சுமார் 5 அடி உயரத்தில் கருங்கற்களால் ஆன வீடுகள் கட்டி வாழ்ந்து வந்ததாகவும் கூற கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் தலைமுறை, தலைமுறையாக அப்படியே இன்றும் கிடக்கிறது. நஞ்சுண்டாபுரத்தில் இருந்து சரியாக 5 கிலோ மீட்டர் தூரத்தில்தான் கொடுமணல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததுடன் மிகப்பெரிய வணிக நகரமாக கொடுமணல் இருந்து வந்தது தற்போதைய அகழ் ஆராய்ச்சியில் தெரியவந்து உள்ளது.
எனவே கொடுமணல் பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த காலத்திலேயே நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தார்களா? அல்லது அதற்கு முன்பாகவோ, பிற்காலத்திலோ வாழ்ந்தார்களா என தெரியவில்லை. அதனால் கொடுமணல் பகுதியில் அகழாய்வு செய்தது போல் நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் அகழ்வாய்வு செய்தால் கண்டிப்பாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைக்கும்’ என்றார்.