கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் இலங்கை அகதி கைது
காரைக்குடியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக இலங்கை அகதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்குடி,
திருச்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஞானேந்திரன் (வயது 37). இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் காரைக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவருக்கு அறிமுகமானார்.
அந்த மாணவிக்கும், ஞானேந்திரனுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி பழகி வந்தனராம்.
இந்தநிலையில் வள்ளுவர் நகரில் இருவரும் சந்தித்தனர். அப்போது அங்கு வந்த மாணவியின் அண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள், ஞானேந்திரனை பிடித்து அடித்து விசாரித்தனர். பின்பு அவர்கள், ஞானேந்திரனை காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் ஞானேந்திரனிடம் விசாரித்த போது, அங்கு வந்த கல்லூரி மாணவி புகார் ஒன்று கொடுத்தார். அதில், ஞானேந்திரன் தனக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதை மறைத்து என்னுடன் நெருங்கி பழகினார். என்னை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்தார். பின்னர் அவர் சொல்கிறபடி நடக்கவில்லை என்றால், இணையதளத்தில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து விடுவதாக மிரட்டினார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.