கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலத்தை மாணவர்கள் முற்றுகை


கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலத்தை மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை மாணவ–மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு,

புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 72 துறைகளில் 100–க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. புதுவை, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 6,500 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் 2019–20–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வெளியிடப்பட்டது. அதில் வழக்கத்தை விட 2 மடங்கு கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு மாணவ–மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் திரண்டனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவ–மாணவிகள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவ–மாணவிகள் வழக்கம்போல் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்க கொடிகளை கைகளில் ஏந்தியபடி துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் அவர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள் இடையே போராட்டம் குறித்து தகவல் மற்றும் வதந்திகள் பரவாமல் இருக்க அங்கிருந்த வை–பை சேவை துண்டிக்கப்பட்டது.


Next Story