கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார் முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் பேட்டி


கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார் முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 8:54 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார் என்று முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் கூறியுள்ளார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், குளச்சல் துறைமுகத்தை கொண்டு வருவேன் என்றார். மீனவ மக்களின் ஆதரவை பெறுவதற்காக இப்போது துறைமுகத்தை வரவிடமாட்டேன் என்கிறார்.

துறைமுகம் அமைந்தால் ஒட்டுமொத்த மாவட்டமும் வளர்ச்சி அடையும். குறிப்பாக மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் துறைமுகம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கு துறைமுகம் அமைவது உறுதி. பொன்.ராதாகிருஷ்ணன் நிச்சயம் துறைமுகத்தை கொண்டு வருவார்.

அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தில் சாலைகள், பாலங்கள் என எங்கு பார்த்தாலும் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்தான் கண்ணுக்கு தெரிகிறது.

மேலும் மீனவர்கள் பயன்பெற ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகளையும் அவர் நிறைவேற்ற உள்ளார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் 7 லட்சம் முதல் 7½ லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெறுவார். அதாவது பொன்.ராதாகிருஷ்ணன் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.

குமரி மாவட்ட த.மா.கா.வில் எந்த பிரச்சினையும் இல்லை. பினுலால்சிங் மட்டுமே வெளியேறி உள்ளார். மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். எங்கள் கட்சி தலைவர் ஜி.கே.வாசனும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வார். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள எங்களது கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு குமாரதாஸ் கூறினார்.

Next Story