சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவரிடம் ரூ.57 ஆயிரம் திருட்டு புகார் வாங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை


சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவரிடம் ரூ.57 ஆயிரம் திருட்டு புகார் வாங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவரிடம் ரூ.57 ஆயிரம் திருட்டு போனது. இதுதொடர்பாக புகார் வாங்காமல் அலைக்கழிக்கப்பட்ட தால் அவர் வேதனை அடைந்தார்.

செம்பட்டு,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது 35). இவர் சிங்கப்பூரில் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 1.30 மணி அளவில் விஜயேந்திரன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் தனது பர்ஸில் சிங்கப்பூர் டாலர் மற்றும் இந்திய ரூபாய் என மொத்தம் ரூ.57 ஆயிரம் வைத்து இருந்தார். விமானத்தில் இருந்து இறங்கி விமானநிலையத்துக்குள் வந்தபோது, அவருடைய பர்ஸ் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சம்பந்தப்பட்ட விமானநிறுவன கண்காணிப் பாளரிடம் தகவல் தெரிவித்தார். அதற்கு அவர் விமானத்தில் தான் தேடி பார்க்க வேண்டும் என்றும், அதுவரை காத்திருக்கும்படி கூறிவிட்டு சென்றார். இதையடுத்து விஜயேந்திரன் விமானநிலையத்தில் ஒருமணிநேரம் அமர்ந்து இருந்தார். அதன்பிறகு அங்கு வந்த விமானநிறுவன ஊழியர்கள் விமானத்துக்குள் பர்ஸ் எதுவும் கிடக்கவில்லை என்று தெரிவித்து விட்டனர். உடனே அவர் விமானநிலைய மேலாளரிடம் இது பற்றி கூறினார். ஆனால் மேலாளரோ, விமானநிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினார்.

அப்போது விமானநிறுவன ஊழியர்கள் 2 பேர் வந்து விஜயேந்திரனிடம் அவரது பர்ஸை கொடுத்தனர். அந்த பர்ஸ் கழிவறையில் கிடந்ததாகவும் கூறினர். அவர் அதை வாங்கி பார்த்தபோது, அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. உடனே அவர் விமானநிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் புகாரை பெறாமல் விமானநிலைய மேலாளரிடம் புகார் அளிக்கும்படி தெரிவித்துவிட்டனர்.

தொடர்ந்து மாறி, மாறி அவரை அலைக்கழித்ததால் விஜயேந்திரன் மனவேதனை அடைந்தார். இறுதியாக விமானநிலைய மேலாளரிடம் இது பற்றி தெரிவித்தவுடன் அவர் புகாரை பெற்று கொண்டு, விமானநிலைய இயக்குனரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சம்பவம் நேற்று திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story