ஊட்டியில், வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தீ - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி


ஊட்டியில், வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தீ - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஊட்டி,

ஊட்டி புளுமவுண்டன் பகுதியில் ஷேட் அரசு மகப்பேறு மருத்துவமனை, நகராட்சி ஊழியர்களின் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், காய்கறி மொத்த விற்பனை குடோன் உள்ளன. அப்பகுதியில் ஒரு ஓட்டலையொட்டி ஊட்டியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்‌ஷாப் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஒர்க்‌ஷாப்பின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்தது. மேற்கூரை மீதும் தீப்பற்றி எரிந்ததோடு, அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு வாகனத்தில் இருந்து பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒர்க்‌ஷாப் உள்பகுதியில் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால், அருகே இருந்த மேற்கூரை மீது நின்றவாறு அணைத்தனர். இதற்கிடையே தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் காலியானது.

ஆனால், தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது. அதன் பின்னர் ஊட்டி நகராட்சி தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஒர்க்‌ஷாப்பில் தீப்பிடித்த போதும், கியாஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தீ பிடித்த போது, உள்ளே யாரும் இல்லை. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேட் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே தீ விபத்து ஏற்பட்டதால், அங்கே வந்திருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story