வேலூரில், 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசம் - ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் விபரீதம்


வேலூரில், 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசம் - ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் விபரீதம்
x
தினத்தந்தி 26 March 2019 11:32 PM GMT (Updated: 26 March 2019 11:32 PM GMT)

வேலூரில் பஸ்களுக்கு பாடிகட்டும் இடத்தில், ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசமாயின.

வேலூர்,

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் பட்டாபி (வயது 48). இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் அருகில் பஸ்களுக்கு பாடிகட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பாடிகட்டவும், புதுப்பிக்கவும் 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் சொகுசு பஸ் ஒன்று பாடிகட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சொகுசு பஸ்சை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக ‘வெல்டிங்’ வைத்தபோது அதில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக பஸ் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 2 சொகுசு பஸ்களுக்கும் தீ பரவவே 3 பஸ்களும் எரியத்தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்கமுடியவில்லை. தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய நிலையில் அவர்கள் இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த பஸ்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் 2 பஸ்கள் முழுவதும் எரிந்து விட்டது. ஒரு பஸ்சின் பின்பக்கம் எரிந்து நாசமானது. மேலும் அந்தப்பகுதியில் அதிக அளவிலான லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் மற்ற பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

Next Story