ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் சிக்கியது


ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 28 March 2019 4:00 AM IST (Updated: 27 March 2019 8:19 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.5¾லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிதரன், சப்–இன்ஸ்பெக்டர் தனபால் உள்ளிட்ட குழுவினர் பவானிசாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.2லட்சத்து 68 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வேனில் வந்த ஊட்டியை சேர்ந்த அப்துல் மஜீத்திடம் (50) விசாரித்தபோது அவர் ஈரோட்டில் மாடு வாங்குவதற்காக பணத்துடன் சென்றதும், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சத்தி–கோவை ரோட்டில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே பறக்கும் படை அதிகாரி மகேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் வரப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (29) என்பவர் கோவை மார்க்கெட்டில் வாழைக்காய்களை விற்றுவிட்டு ரூ.95 ஆயிரத்துடன் சென்றது தெரியவந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அதே இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கோவையில் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு சென்று கொண்டிருந்த புளியம்பட்டி இந்திராநகரை சேர்ந்த முகமது ஜக்கரியா (37) என்பவரிடம் ரூ.96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சண்முகம், போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி ஆகியோர் பவானிசாகர்–புளியம்பட்டி சாலையில் உள்ள பனையம்பள்ளி என்ற இடத்தில் நேற்று மதியம் 12.15 மணி அளவில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (22), செல்லதுரை (26) ஆகியோர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 485 பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நடந்த பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.5லட்சத்து 73 ஆயிரத்து 485 பறிமுதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story