அழிந்து வரும் காங்கேயம் காளைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
அழிந்துவரும் காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா? என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மூலனூர்,
காங்கேயம் இன காளைகளை வளர்த்துவரும் விவசாயிகள் கூறியதாவது:–
உலக அளவில் புகழ் பெற்றது காங்கேயம் இன காளைகள், பசு மாடுகள், இந்த இன காளைகள், மாடுகள் கடும் வறட்சியை தாங்கி வாழக்கூடியது. குறைவான தீவனங்கள் சாப்பிட்டு அதிக நேரம் சோர்வு இல்லாமல் உழைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த காளைகள் 3 டன் சுமையை வண்டியில் கட்டி அசராமல் இழுத்துச்செல்லும். பால் குறைவாக கொடுத்தாலும் அது சத்து மிக்கது. பாலில் அதிக சுவை இருக்கும். கொங்கு பகுதியில் திருமணம் நடந்தால் சீதனமாக காங்கேயம் இன பசு மாடுகளை பெண் வீட்டார் கொடுப்பது வழக்கம்.
இன்றளவும் இந்த வழக்கம் இந்த பகுதியில் நடைமுறையில் உள்ளது. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் இந்த மாட்டின் பாலை குடித்து அதிக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதுவே இந்த மாட்டின் பெருமை. தற்போது காங்கேயம் இன காளைகள், மாடுகள் மிகவும் குறைந்து வருகிறது. விவசாயிகள் இந்த இன மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இந்த மாடுகளை வளர்க்க அதிகம் தீவன செலவு ஆவதாலும், விவசாய பணிகளுக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த காளைகளை வளர்க்க யாரும் விருப்பம் காட்டுவதில்லை.
காங்கேயம் இன காளைகளை விற்பனை செய்ய காங்கேயம் அருகே கண்ணபுரம் மாட்டு சந்தை ஆண்டு தோறும் கூடி வருகிறது. பழங்காலத்தில் சுமார் 1 லட்சம் மாடுகள் வரை விற்பனைக்கு வந்தது தற்போது சுமார் 25 ஆயிரம் மாடுகளே விற்பனைக்கு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போது வெளிநாட்டு மாடுகளான சிந்து, ஜெர்சி, மாடுகளை விவசாயிகள் அதிகம் வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் கடும் கோடை வெப்பத்தை தாங்கி வாழக்கூடியது அல்ல, பராமரிப்பும் செலவு அதிகம்.
எனவே காங்கேயம் இன மாடுகளை வளர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அழிந்து வரும் இந்த இன காளைகள், பசு மாடுகளை வளர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த இன மாடுகளை வளர்க்க மானியம் வழங்கப்பட்டு வந்ததால் இந்த இன மாடுகள் ஏராளமாக பெருகின. எனவே காங்கேயம் மாடுகள் இனத்தை பெருக்க உரிய முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.