முத்தூர் அருகே நூல்மில்லில் தீ விபத்து பஞ்சு பேல்கள் எரிந்து நாசம்
முத்தூர் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் காட்டன் பஞ்சு பேல்கள் எரிந்து நாசம் அடைந்தன.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் அருகே உள்ள தண்ணீ£ பந்தல் பழனியாண்டபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு நூல்மில் செயல்பட்டு வருகிறது. இந்த நூல் மில்லின் உரிமையாளராக பாலுச்சாமி (வயது 60) என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த நூல் மில்லின் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்டன் பஞ்சு பேல்களின் ஒரு பகுதி நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
அப்போது சுட்டெரிக்கும் மதிய வெயில் காரணமாகவும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ மளமளவென்று வேகமாக காட்டன் பஞ்சு பேல்கள் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இந்த தீ விபத்தின் காரணமாக மேலே நீண்ட உயரத்திற்கு கரும்புகை பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நூல் மில் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சி.தனசேகரன், வேலுச்சாமி (போக்குவரத்து) ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமான காட்டன் பஞ்சு பேல்களின் மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.