ஓ.பன்னீர்செல்வம் மகன் என்பதை தவிர அ.தி.மு.க. வேட்பாளருக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஓ.பன்னீர்செல்வம் மகன் என்பதை தவிர அ.தி.மு.க. வேட்பாளருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று பெரியகுளத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
பெரியகுளம்,
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பெரியகுளம், தேனி நகரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பெரியகுளத்தில் தென்கரை வள்ளுவர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் முரளி வரவேற்று பேசினார். பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஈ.வி.கே.சம்பத் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக வாக்கு சேகரிப்பதை எண்ணி நான் பெருமை அடைகிறேன். அவர், துணிச்சலாக எதையும் பேசும் ஆற்றல் கொண்டவர். தேனி மாவட்டத்துக்காக எதையும் போராடி, வாதாடி வாங்கித் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர். மத்தியில் ராகுல்காந்தி தான் பிரதமராக வரப்போகிறார். அப்படி வரும்போது, பல நன்மைகளை தமிழகத்துக்கு பெற்றுத்தர நாம் காத்திருக்கிறோம்.
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்று, அவர் மூலம் பல காரியங்களை நீங்கள் பெற இருக்கிறீர்கள். பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின் மகன் என்பதற்காக அவருக்கு இந்த தொகுதி கிடைத்து இருப்பதாக நான் கருதவில்லை. அவர், திறமைசாலி, தைரியசாலி, போராட்டக்காரர் என்பதற்காக தான் அவருக்கு இந்த தொகுதி கிடைத்து உள்ளது என்பதை நான் மனதார நம்புகிறேன்.
இதை குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம், எதிரணியில் அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு இந்த தொகுதியை வழங்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மகன் என்ற தகுதியை தவிர வேறு ஏதாவது தகுதி அந்த வேட்பாளருக்கு உண்டா? சொல்லமுடியாத விஷயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் இந்த மேடையில் வெளிப்படையாக சொல்ல முடியாது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு சீட் வாங்கி இருக்க முடியுமா? ஒரு உண்மையை சொல்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைப்பது கூட கஷ்டமாக இருந்தது. அதை எல்லாம் நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். தன்னுடைய மானம் போய்விடும், மரியாதை போய்விடும், நான் உயிர் வாழவே முடியாது என்று ஜெயலலிதாவின் காலில் விழுந்து கெஞ்சியதால் ஜெயலலிதா சீட் கொடுத்தார்.
18 தொகுதிகளில் நாம் இடைத்தேர்தலை சந்திக்க என்ன காரணம்? முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவின் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அதேபோல், முதல்-அமைச்சருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. அந்த தீர்ப்பு வந்தால் 11 பேரின் பதவியும் காலியாகும். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது. மக்களின் ஆதரவோடு, தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.
சசிகலாவின் காலில் விழுவதற்கு மண்புழு போல் ஊர்ந்து, தவழ்ந்து முதல்-அமைச்சர் பதவியை பெற்றவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தியானம் செய்து தர்மயுத்தம் ஆரம்பித்து, பின்னர் பதவியை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய தங்கக் கட்டிகள், பணம் ஆகியவற்றில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றிய டைரியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இருந்தது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சோத்துப்பாறை, போடி ஆகிய இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை ஓ.பன்னீர்செல்வம் வாங்கி குவித்துள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தமிழக உரிமைகளை ஏதேனும் மீட்டுள்ளதா? பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறிக் கொள்கிறார். அவர், விஜய் மல்லையா, எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் மற்றும் பொள்ளாச்சி குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தான் காவலாளி. இந்தியாவை கொள்ளையடிப்பவர்களுக்கு தான் காவலாளி மோடி.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை மாற்ற மக்கள் தயாராகி விட்டார்கள். ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை, புதிய பஸ் நிலையம், மதுரையில் இருந்து புதிதாக தேனி மாவட்டத்தை உருவாக்கியது கருணாநிதி ஆட்சியில் நடந்தவை. எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்று கும்பக்கரை அருவி அருகே புதிதாக வவ்வால் துறை அணைக் கட்டு கட்டப்படும். சோத்துப்பாறை அணை தூர்வாரப்படும். பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். பெரியகுளம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். விவசாய கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். போடி-மதுரை, திண்டுக்கல்-குமுளி ரெயில் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத் தேர்தல் நடக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று அந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்ட முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story